ஜம்மு காஷ்மீர் பி.டி.பி.-பா.ஜ.க. தலைவர்கள் கவர்னருடன் சந்திப்பு: ஆட்சியமைக்க உரிமை கோரினார் மெகபூபா..!!

690026b9-165d-4936-ac78-491dfeee8bcc_S_secvpfஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் முதல் மந்திரி முப்தி முகமது சயீத் மரணமடைந்த பின்னர், அவரது மகள் மெகபூபா முப்தி முதல்வராக பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆளும் மக்கள் ஜனநாயக கட்சி(பி.டி.பி.)-பா.ஜ.க. கூட்டணியில் ஒருமித்த கருத்து ஏற்படாமல் இழுபறி நீடித்ததால் கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில், பிரதமர் மோடியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் பி.டி.பி. தலைவர் மெகபூபா சந்தித்துப் பேசினார். அதன்பிறகு மெகபூபா கூறுகையில், “பிரதமருடனான சந்திப்பு திருப்திகரமாக இருந்தது. கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் சந்தித்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று கூறினார்.

இதை தொடர்ந்து பி.டி.பி. சட்டமன்ற கட்சி தலைவராக மெகபூபாவும், பா.ஜ.க. சட்டமன்ற கட்சி தலைவராக முன்னாள் துணை முதல்வர் நிர்மல் சிங்கும் தேர்வு செய்யப்பட்டனர். அத்துடன் பி.டி.பி.-பா.ஜ.க. கூட்டணி அரசு அமைக்கவும் முடிவு செய்தனர். எனவே, இரு கட்சி தலைவர்களும் ஆளுநரை நேற்று சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மறுநாள் அதாவது இன்று கவர்னரை சந்திப்பதாக தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, மெகபூபா, நிர்மல் சிங் மற்றும் இரு கட்சிகளின் மூத்த தலைவர்கள் கவர்னரை சந்தித்தனர். அப்போது ஆட்சியமைக்க உரிமை கோரி மெகபூபா கடிதம் கொடுத்தார். மெகபூபா தலைமையில் அமைய உள்ள புதிய அரசுக்கான ஆதரவு கடிதத்தை பா.ஜ.க. தலைவர் நிர்மல் சிங் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நிர்மல் சிங், ஜம்மு காஷ்மீரில் மெகபூபா முப்தி தலைமையில் புதிய அரசு அமைக்க பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் ஒருமனதாக ஆதரவு அளிப்பதாக கூறினார். அவர்களின் நிபந்தனையற்ற ஆதரவுக்கு மெகபூபா நன்றி தெரிவித்துள்ளார். மேலும், பிரதமர் மோடி அளித்த வாக்குறுதிகள் தங்களுக்கு திருப்தி அளிப்பதாகவும் அவர் கூறினார்.

கவர்னர் வோரா அழைப்பு விடுத்ததும் மாநிலத்தின் முதல் பெண் முதல்வராக மெகபூபா பதவியேற்க உள்ளார்.