சூர்யா கதாநாயகிகளுடன் பேச வெட்கப்படுவார்: சமந்தா..!!

201609120808108199_surya-will-be-ashamed-to-talk-with-heroines-samantha_secvpfநடிகை சமந்தா ஐதராபாத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

கேள்வி:- உங்கள் திருமணம் எப்போது?

பதில்:- நான் ஏற்கனவே சொன்னதுபோல் ஒருவருடன் காதலில் இருக்கிறேன். அவர் யார்? திருமணம் எப்போது நடக்கும் என்றெல்லாம் கேட்காதீர்கள். எனக்கு நல்ல குடும்பம் வேண்டும். குழந்தைகள் வேண்டும். எங்கள் திருமண தேதியை தகுந்த நேரத்தில் அறிவிப்பேன்.

கேள்வி:- புதிய படங்களில் ஒப்பந்தமாகவில்லையே. நடிப்பதை நிறுத்தி விட்டீர்களா?

பதில்:- நிறைய படங்களில் நடித்ததால் கொஞ்சம் ஓய்வு தேவைபட்டது. அந்த ஓய்வை கூட வீட்டில் சமையல் கற்பதில்தான் செலவிட்டேன். திருமணத்துக்கு பிறகும் சினிமாவை விட்டு விலகமாட்டேன். நான் வாழப்போகிற குடும்பத்தின் கவுரவத்தை பாதிக்காத வகையில், கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பேன்.

கேள்வி:- எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?

பதில்:- சினிமாவில் எதுவும் நிரந்தரம் இல்லை. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒருவரின் தலையெழுத்து மாறுகிறது. பணம், புகழ் எதுவும் இங்கு நிலைக்காது. எனவே எந்த எதிர்கால திட்டமும் எனக்கு இல்லை. நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை மட்டுமே இருக்கிறது.

கேள்வி:- சமூக சேவையில் ஆர்வம் எப்படி வந்தது?

பதில்:- எனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் இருந்தேன். அப்போதுதான் வாழ்க்கையை பற்றி தீவிரமாக யோசித்தேன். குழந்தைகளுக்கு உதவ பிரதியூஷா என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கும் எண்ணம் ஏற்பட்டது. சினிமாவுக்கு வருவதற்கு முன்பு இரண்டு பஸ்களில் மாறித்தான் கல்லூரிக்கு போவேன். வருமானம் இல்லாத அந்த காலத்தில் கூட எனது அம்மா கொஞ்சம் பணத்தை ஒதுக்கி ஏழைகளுக்கு சின்ன உதவிகள் செய்வார். இப்போது என்னிடம் நிறைய பணம் இருக்கிறது. எனவே அதன்மூலம் மக்களுக்கு உதவுகிறேன்.

கேள்வி:- உங்களுடன் நடித்த கதாநாயகர்கள் சூர்யா, மகேஷ்பாபு பற்றி..?

பதில்:- சூர்யா தொழிலில் ரொம்ப அக்கறை எடுப்பார். சக கதாநாயகிகளுடன் பேச வெட்கப்படுவார். நல்ல உழைப்பாளி. மகேஷ்பாபு மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவர். வேலைகளை அர்ப்பணிப்போடு செய்வார்.

கேள்வி:- உங்களின் தீராத ஆசை என்ன?

பதில்:- எல்லா கதாநாயகிகளுக்கும் முன்னணி கதாநாயகர்களுடனும், பெரிய இயக்குனர்கள் படங்களிலும் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். எனக்கு இந்த இரண்டுமே நடந்து இருக்கிறது. எனவே தீராத ஆசை எதுவும் இல்லை.

இவ்வாறு சமந்தா கூறினார்.