லஞ்சத்துக்கு எதிராக என் கோபத்தை தான் வெளிப்படுத்தினேன்: கபில் சர்மா திடீர் பல்டி..!!

201609120859340832_my-anger-against-corruption-is-have-manifested-kapil-sharma_secvpfபிரபல நகைச்சுவை நடிகரும், டி.வி.நிகழ்ச்சி தொகுப்பாளருமான கபில் சர்மா மும்பையில் உள்ள தன்னுடைய அலுவலகத்தில் உரிய அனுமதி இன்றி, சட்டவிரோதமாக கட்டிடம் கட்டியதாகவும், இந்த விவகாரத்தை சாதகமாக பரிசீலிக்க மாநகராட்சி அதிகாரி ஒருவர் அவரிடம் ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்டதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது.

இதுபற்றி டுவிட்டரில் பதிவு செய்த 35 வயது நடிகர் கபில் சர்மா, அதில், பிரதமர் மோடி பெயரையும் குறிப்பிட்டு, “கடந்த 5 ஆண்டுகளாக அரசாங்கத்துக்கு ரூ.15 கோடி வரை வரி செலுத்தி இருக்கிறேன். இப்போது, என்னுடைய அலுவலக கட்டிட பணிக்காக இன்னமும் ரூ.5 லட்சம் செலுத்த வேண்டுமா? நரேந்திர மோடி அவர்களே, இது தான் நீங்கள் அறிவித்த நல்ல நாட்களா?” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த மாநகராட்சிக்கு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டார். இந்தநிலையில், கபில் சர்மாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் விதத்தில், அவர் வெர்சோவாவில் அமைந்துள்ள தன்னுடைய அலுவலகத்தில் மட்டுமின்றி, கோரேகாவில் உள்ள வீட்டிலும் விதிமுறைகளை மீறி சட்டவிரோதமாக கட்டிடங்கள் கட்டியது வெளிச்சத்துக்கு வந்தது.

இதனால், இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த பிரச்சினையில் கபில் சர்மா திடீரென ‘பல்டி’ அடித்திருக்கிறார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

நான் டுவிட்டரில் லஞ்சத்துக்கு எதிரான என்னுடைய கோபத்தையும், கவலையையும் தான் வெளிப்படுத்தினேன். ஆனால், அது தேவையற்ற சர்ச்சை வடிவத்தை எடுத்துவிட்டது. எனக்கான இடம் பொழுதுபோக்கு தளம் தானே தவிர, செய்திக்களம் அல்ல.

நான் எந்தவொரு அரசியல் கட்சியிலும் அங்கம் வகிக்கவில்லை. அரசியலில் ஈடுபடுவதற்கான எண்ணமும் இல்லை.

பிரதமர் மோடி, மத்திய, மாநில அரசுகள், அரசின் ஏஜென்சிகள் மற்றும் சட்ட ரீதியான அமைப்புகள் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். நான் சட்டத்தை மதித்து நடக்கும் சாதாரண குடிமகன். சட்ட ஆலோசனைப்படி நடப்பவன்.

இவ்வாறு அதில் கபில் சர்மா தெரிவித்துள்ளார்.