அச்சம் என்பது மடமையடா படப்பிடிப்பு முடிந்தது..!!

201609131020489869_aym-shoot-wrapped_secvpfசிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படம் ‘அச்சம் என்பது மடமையடா’. ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்திற்கு பிறகு சிம்பு-கவுதம் மேனன் கூட்டணியில் உருவாகும் படம் என்பதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

கூடவே, ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைப்பது படத்தின் மீது மேலும் எதிர்பார்ப்பை அதிகமாக்கியது. இப்படத்தின் படப்பிடிப்பு இடைவெளி விட்டு இடைவெளி விட்டு நடத்தப்பட்டதால் படம் முடிவடைவது நீண்டு கொண்டே போனது. இதனால், எப்போது படம் முடியும் என்று ஒரு கேள்வியே எழுந்தது.

கிட்டத்தட்ட அனைத்து படப்பிடிப்புகளும் முடிந்துவிட்ட நிலையில், இப்படத்தில் மிகவும் ஹிட்டான ‘தள்ளிப் போகாதே’ பாடல் மட்டும் படமாக்கப்படாமல் இருந்தது. கவுதம் மேனன் அந்த பாடலை பதிவு செய்யப்போவதில்லை என்று முடிவு செய்திருந்தார். ஆனால், சிம்புவோ அந்த பாடலை பதிவு செய்தே ஆகவேண்டும் என்பதில் விடாபிடியாக இருந்தார்.

இதனால் படத்தை முடிப்பது தள்ளிக்கொண்டே போனது. கடைசியாக கவுதம்மேனன் இறங்கி வந்து, அந்த பாடலை எடுக்க முன்வந்தார். அதன்படி, சமீபத்தில் பாங்காக்கில் இப்பாடலுக்கான படப்பிடிப்பு நடத்தி முடித்துள்ளனர். இதோடு இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து விட்டது.

படப்பிடிப்பு முடிவடைந்ததும் சிம்பு கூறும்போது, இதமான நல்ல படத்தை உருவாக்கி கொடுத்ததற்கு கவுதம் மேனனுக்கு நன்றி. இந்த படத்தில் நான் இருந்தது மகிழ்ச்சியளிக்கிறது. படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.