ராஜிவ் கொலை; பொட்டு அம்மானுடன் சி.பி.ஐ.க்கு அருகில் இருந்து, பேசிக் கொண்டு இருந்தார் சிவராசன்! (அத்தியாயம் -34)

rajiv-assasination-20ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட பொதுக்கூட்டத்துக்கு போட்டோ எடுக்க அழைத்துச் செல்லப்பட்டு, அந்த தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்த சென்னையைச் சேர்ந்த போட்டோகிராபரான ஹரிபாபுவுக்கு கண்ணீர் அஞ்சலி நோட்டீஸ் அடிக்க விரும்பிய நண்பர் ஒருவர், ஹரிபாபுவின் சகோதரி வீட்டில் உள்ள ரூம் ஒன்றில் ஹரிபாபுவின் போட்டோ தேடியதை கடந்த அத்தியாயத்தில் கூறியிருந்தோம். ஹரிபாபுவின் சகோதரி வீட்டில் இந்த நண்பருக்கு ரூமை திறந்து விட்டார்கள். அங்கு விடுதலைப்புலிகளுடன் ஹரிபாபுவைத் தொடர்பு படுத்தும் ஏராளமான பிரசுரங்களும், ஆவணங்களும் இருப்பதை கண்டு திகைத்துப் போய்விட்டார் அந்த நண்பர். உடனடியாக தமிழக போலீஸூக்கு தகவல் கொடுத்தார் அந்த நண்பர்! இந்தப் பிரசுரங்களும், ஆவணங்களும்தான், தமிழக காவல்துறைக்கு ராஜிவ் காந்தி கொலையில் விடுதலைப் புலிகளுக்கு தொடர்பு இருக்கலாமோ என்ற சந்தேகத்தை முதலில் ஏற்படுத்தியது. அதன்பின் சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்ட போது, ஹரிபாபுவின் சகோதரி வீட்டில் கிடைத்த விடுதலைப் புலிகள் பிரசுரங்களை தமிழக காவல்துறை, சி.பி.ஐ. வசம் கொடுத்தது. இதையடுத்து, ராஜிவ் கொலை வழக்கில் சுபா சுந்தரம் பின்னர் சிறப்புப் புலனாய்வுப் படையால் கைது செய்யப்பட்டார். காரணம், ராஜிவ் கொல்லப்பட்ட பொதுக்கூட்டத்துக்கு ஹரிபாபு கொண்டு சென்ற காமராவை கொடுத்தவர், சுபா சுந்தரம். இதற்கிடையே, டிக்சனும், ராஜாவும் சந்தித்த வீட்டின் உரிமையாளரான பொறியாளரின் மனைவி, சிறப்பு புலனாய்வுக் குழுவால் விசாரிக்கப்பட்டார். அப்போது அவர், தங்கள் வீட்டுக்கு ராஜா வருவதற்கு ஏற்பாடு செய்த ‘ஆன்ட்டி’ பற்றி கூறினார். இலங்கை வல்வெட்டித்துறை பெண்ணான அந்த ‘ஆன்ட்டி’ சென்னை ராயப்பேட்டையில் தனது இரு குழந்தைகளுடன் வசித்து வந்தார். ‘ஆன்ட்டி’ விசாரிக்கப்பட்டார். “1991 மே மாதம் எனக்குத் தெரிந்தவரான ‘தம்பி அண்ணா’ என்பவர், சிவராசனை தனது வீட்டுக்கு அழைத்து வந்ததாக அவர் கூறினார். “இலங்கை வல்வெட்டித்துறையில் உள்ள எனது தாயாரிடமிருந்து ஒரு கடிதத்தை சிவராசன் கொண்டு வந்திருந்தார். சிவராசனுக்கு அனைத்து உதவிகளையும் செய்யுமாறு அக்கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. அதனால் சில உதவிகள் செய்தேன்” என்ன உதவி செய்தார்? சிவராசன், தனது உறவுக்கார பெண் ஒருவர் இலங்கையில் இருந்து வந்திருப்பதாகவும், அவர் சில நாட்கள் தங்க இடம் வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அப்படி தங்க வைக்கப்பட்ட பெண்தான், ஆதிரை! சிவராசன், ஆதிரையை ‘கௌரி’ என்ற பெயரில் ஆன்ட்டியிடம் அறிமுகம் செய்துள்ளார். இந்த ஆன்ட்டிக்கு ஆதிரை யார் என்பதே தெரியாது. தனது குழந்தைகளுடன் சிதம்பரம், மயிலாடுதுறை, ஊட்டி, பெங்களூரு ஆகிய இடங்களுக்குச் சுற்றுலா சென்றபோது, ஆதிரையை உடன் அழைத்துச் சென்றார். ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பலர் தொடர்பு பட்டது, இப்படியான காரணங்களால்தான். இவர்களில் யாருக்குமே, ராஜிவ் காந்தி கொலை பற்றிய எந்தவொரு தகவலும் தெரியாது. ஆன்ட்டி சுற்றுலா முடிந்து திரும்பியதும், ஜூன் 2-வது அல்லது 3-வது வாரத்தில் ஆன்ட்டி வீட்டுக்கு முதலில் ராஜாவை அழைத்து வந்தார் சிவராசன். அதன்பின் முதியவரான சபாபதி பிள்ளையை அழைத்து வந்து ஆதிரையைச் சந்திக்க வைத்தார். ஆதிரை விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர். சபாபதி பிள்ளை, விடுதலைப் புலிகளின் யாழ்ப்பாண தளபதி ராதாவின் (ஹரிசந்த்திரா) தந்தை. ஆனால், இவர்களுக்கும், நாஜிவ் காந்தி கொலைக்கும் எந்த தொடர்பும் கிடையாது. இவர்கள் இருவரும் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது, விடுதலைப் புலிகளுக்கு டில்லியில் ஒரு அலுவலகம் திறப்பதற்காக. தம்பி அண்ணாவை பொலீசார் பிடித்துச் சென்றதும், ராஜா ஆன்ட்டி வீட்டுக்கு வந்து ஆதிரையை அழைத்துச் சென்று விட்டார். ஆதிரை இருக்கும் இடத்தை தம்பி அண்ணா பொலீசில் சொல்லிவிடுவார் என்ற பயமே இதற்குக் காரணம். ஜூலை 1-ம் திகதி சபாபதி பிள்ளையும், ஆதிரையும் ஆன்ட்டியை வந்து பார்த்துவிட்டுச் சென்றனர். அன்று மாலை இருவரும் டில்லி செல்லும் ரயிலில் போய்விட்டனர். அதன்பின் அவர்கள் கைது செய்யப்பட்டது பற்றி ஏற்கனவே எழுதி விட்டோம். ஜூன் கடைசி வாரத்தில், சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த (வழக்கில் பெயர் குறிப்பிடப் படாத சாட்சி) ஒருவர், சிறப்பு புலனாய்வுதுறை அலுவலகமான மல்லிகைக்கு சென்றார். அவரிடம் ஒரு தகவல் இருந்தது. இவரது மனைவி யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர். தனது மனைவியின் உறவினர்கள் தங்களைப் பார்ப்பதற்காக சென்னை வந்ததாக தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த உறவினரான பாஸ்கரன், சென்னையில் வாடகைக்கு ஒரு வீடு பிடித்து கொடுக்குமாறு, சைதாப்பேட்டை நபரிடம் கேட்டார். இதற்கிடையே ராஜிவ் படுகொலை செய்யப்பட்டிருந்த காரணத்தால், இலங்கைத் தமிழர்கள் மீது அரசு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. சுலபமாக வீடு பிடிக்க முடியாது. சைதாப்பேட்டை சாட்சி நபர், அந்த வீட்டில் தங்கப்போவது யார் என்பதை பாஸ்கரனிடமிருந்து தெரிந்துகொள்ள விரும்பினார். சிறிது தயக்கத்துக்குப் பிறகு மிக முக்கியமான நபருக்கு என்றார் பாஸ்கரன். மீண்டும் வலியுறுத்திக் கேட்டபோது, “கொடுங்கையூர் எம்.ஆர். நகரில் பாஸ்கரனின் மருமகன் விஜயன் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ள சிவராசன், சுபா ஆகியோருக்குத்தான் அந்த வீடு” என்றார் பாஸ்கரன். ராஜிவ் கொலை வழக்கில் சிவராசன், சுபா ஆகியோருடைய போட்டோக்கள் பத்திரிகைகளில், ‘தேடப்படுவேர்’ என்று விளம்பரம் செய்யப்பட்டிருந்த நேரம் அது. அவர்களுக்கு வாடகைக்கு வீடு பிடித்து கொடுக்க மறுத்த சைதாப்பேட்டை சாட்சி நபர், இது பற்றி தகவல் கொடுக்கவே, சிறப்பு புலனாய்வுத்துறை அலுவலகமான மல்லிகைக்கு சென்றிருந்தார். ஆனால், அவரிடம் விஜயனின் முகவரி இல்லை. அவரது மனைவியின் உறவினர் பாஸ்கரன், கொடுங்கையூர் எம்.ஆர். நகரில் விஜயன் வீட்டில் பாதி நேரமும், அகதிகள் முகாமில் பாதி நேரமுமாகக் கழித்து வந்ததாக சைதாப்பேட்டை சாட்சி தெரிவித்தார். சிறப்பு புலனாய்வுப் பிரிவினர், அகதிகள் முகாமுக்கு சென்று பார்த்தபோது, பாஸ்கரன் அங்கில்லை. கொடுங்கையூர் எம்.ஆர். நகர் பகுதியில் சிறப்பு புலனாய்வுப் பிரிவினர் சுற்றி வந்தும், விஜயனின் வீட்டை கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த சமயத்தில் மற்றொரு நபர், மல்லிகை அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தார். இவர், கொடுங்கையூர் எம்.ஆர். நகரில் விஜயன் வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்காரர். அந்த நபர் பகிரங்கமாக வெளிவரப் பயந்த போதிலும் சிறப்பு புலனாய்வுக் குழுவை சந்தித்தார். “நீங்கள் தேடிக்கொண்டு இருக்கும் இருவரும் (சிவராசன், சுபா) எனது பக்கத்து வீட்டில்தான் இருக்கிறார்கள்” என்றார் இவர். உடனடியாக சிறப்பு புலனாய்வுக் குழு அந்த வீட்டை ரவுண்ட் பண்ணியது. ஆனால், வீடு பூட்டப்பட்டு இருந்தது. யாருமில்லை. பாஸ்கரனும் அங்கு இல்லை என்பதால், அவர் மீண்டும் அகதிகள் முகாமுக்கு போயிருக்கலாம் என்ற ஊகத்தில் உடனே அகதிகள் முகாமுக்கு சென்றது புலனாய்வு டீம். அங்கே போனால், பாஸ்கரன் இருந்தார். அவர் கைது செய்யப்பட்டார். இதற்கிடையே சிவராசன், சுபா இருவரும், கொடுங்கையூர் எம்.ஆர். நகரில் விஜயன் வீட்டில் இருந்து மற்றொரு மறைவிடத்துக்கு சென்றுவிட, மறுநாள் விஜயன், அவரது மனைவி செல்வலட்சுமி ஆகியோர் தமது கொடுங்கையூர் எம்.ஆர். நகர் வீட்டுக்கு திரும்பினர். அந்த வீட்டை கண்காணித்துக் கொண்டிருந்த சிறப்பு புலனாய்வு பிரிவினரிடம் சிக்கினர். பாஸ்கரன், அவரது மருமகன் விஜயன், அவரது மனைவி செல்வலட்சுமி ஆகியோர் விசாரணையின்போது பல தகவல்களை கூறினர். இந்த பாஸ்கரன் 40 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவை விட்டுச் சென்று இலங்கையில் குடியேறியவர். அவரது மகள் செல்வலட்சுமிக்கு, இந்தியத் தமிழரான விஜயனை மணமுடித்து கொடுத்து, அவரையும் யாழ்ப்பாணம் அழைத்து சென்றார் பாஸ்கரன். மோட்டார் மெக்கானிக்கான விஜயன், யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளின் வாகனங்களைப் பழுதுபார்ப்பது வழக்கம். இந்திய அமைதிப்படை இலங்கையை விட்டு வெளியேறியபின், விடுதலைப் புலிகள் மீண்டும் தமிழகத்தில் கால் பதிக்க விரும்பினர். அந்த நேரத்தில், தமிழகத்தில் ரகசிய மறைவிடங்களை தெரிவு செய்வதற்காக இலங்கையில் வசித்து வந்த இந்தியாவில் உறவினர்களைக் கொண்ட இந்தியத் தமிழர்களை விடுதலைப் புலிகளின் உளவுத்துறை தேர்ந்தெடுத்தது. அப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்தான், பாஸ்கரன், மற்றும் அவரது மகளும் மருமகனும். 40 ஆண்டுகளாக பாஸ்கரன் இலங்கையில் வசித்தவர், அவரது மகள் செல்வலட்சுமி இலங்கையில் பிறந்தவர். ஆனால், அவர்களது உறவினர்கள் தமிழகத்தில் இருந்தனர். இதனால், இவர்களை இந்தியாவுக்குப் போய் அகதிகள் முகாமில் தங்கியிருக்குமாறு விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவைச் சேர்ந்த சிவராசன் அனுப்பி வைத்துள்ளார். இவர்கள் ராமேஸ்வரத்தக்கு வந்து 1990-ம் ஆண்டு செப்டெம்பர் 12-ம் தேதி அகதிகளாகப் பதிவு செய்துகொண்டனர். அதே சமயத்தில்தான் ஜெயக்குமாரும் அவரது குடும்பத்தினரும் அங்கு வந்து அகதிகளாகப் பதிவு செய்து கொண்டுள்ளனர். பின்னர், இவர்கள் தூத்துக்குடி அகதிகள் முகாமுக்கு மாற்றப்பட்டனர். 1990-ம் ஆண்டு டிசம்பரிலிருந்து இவர்களுடன் சிவராசன் தொடர்ந்து தொடர்பில் இருந்தார். அகதிகள் முகாமில் தங்கியிருந்த இவர்களுக்கு செலவுக்கு பணம், மாதாமாதம் கிடைக்க சிவராசன் ஏற்பாடு செய்திருந்தார். இவர்கள் அகதிகள் முகாமில் தங்கியிருக்க, சென்னையிலும், புறநகரப் பகுதிகளிலும் சிவராசன் தமது இந்திய தொடர்பாளர்கள் மூலம் வேறு வீடுகளை பயன்படுத்தி கொண்டிருந்தார். அப்போது, ராஜிவ் காந்தி கொல்லப்பட்டிருக்கவில்லை என்பதால், சிரமமாக இருக்கவில்லை. விடுதலைப் புலிகளின் சர்வதேச குழுவின் பொது அலுவலகம் போரூரில் ராபர்ட் பயஸ் வீட்டில் இருந்தது. வெகு சிலருக்கு மட்டுமே தெரிந்த சிவராசனின் ரகசிய அலுவலகம், முத்தமிழ் நகரில் ஜெயகுமார் வீட்டில் இருந்தது. அவர்கள் பயன்படுத்துவதற்காக பத்மாவின் வீடும், வில்லிவாக்கத்தில் நளினியின் வீடும் இருந்தன. இங்கெல்லாம் சிவராசனும், மற்றையவர்களும் வந்து சென்றது சந்தேகமாக பார்க்கப்படவில்லை. அப்படியான நேரத்தில்தான், தமிழகத்தில் விடுதலைப் புலிகள் உளவுப்பிரிவின் ரகசிய நடவடிக்கைகளுக்காக தனக்கென தனியாக ஓர் இடம் தேவையென சிவராசன் விரும்பினார். அங்கு தனது ஒயர்லெஸ் நிலையத்தை இயக்கவும், சுபா, தனு ஆகியோரை மறைத்து வைத்திருக்கவும் விரும்பினார். தமிழகத்தில் இருந்து யாழ்ப்பாணத்தை தொடர்பு கொள்ள சிவராசன், ஏப்ரல் இறுதி வரையில் காந்தனின் ஒயர்லெஸ் சாதனத்தையும், அவரது ஒயர்லெஸை இயக்கும் ரமணனையும் பயன்படுத்தி வந்தார். ஆனால், ராஜிவ் காந்தி ஆபரேஷன் திட்டமிடப்பட்டபின், தமக்கென தனி ஒயர்லெஸ் தேவை என முடிவெடுத்தார். இதற்காக ஒயர்லெஸ் கருவி, மற்றும் அதை இயக்க ஒரு நபர் தேவை என விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மானுக்கு தகவல் அனுப்பினார். இந்த ரகசிய இடத்தை வாடகைக்கு பிடிக்கவே, அகதிகள் முகாமில் இருந்த இந்தியரான விஜயனை பயன்படுத்திக் கொண்டார். 1991 ஏப்ரல் மாத மத்தியில், சிவராசனின் கட்டளையின்படி, சென்னை கொடுங்கையூர் எவரெடி காலனியில் இருந்த தனது உறவினர்கள் உதவியுடன் வாடகைக்கு ஒரு வீட்டைப் பிடித்தார் விஜயன். அதன்பின் இலங்கை சென்ற சிவராசன், ராஜிவ் காந்தியை கொன்ற மனித வெடிகுண்டு தனு, அவரது மாற்று தற்கொலை குண்டுதாரியாக சுபா ஆகியோரை அழைத்துக் கொண்டு தமிழ்நாட்டுக்கு வந்தார். அப்போது தமக்கான ஒயர்லெஸ் சாதனத்தையும், அதை இயக்க நேரு என்பவரையும் அழைத்து வந்தார். ஒயர்லெஸ் ஆபரேட்டர் நேரு, பெண் விடுதலைப் புலிகள் தனு, சுபா ஆகியோரை விஜயன் புதிதாக வாடகைக்கு பிடித்த வீட்டில் தங்கச் செய்தார் சிவராசன். இவர்கள் எதற்காக வந்துள்ளார்கள் என்பது, விஜயனுக்கோ, அவரது மனைவிக்கோ தெரியாது. அவர்களது வேலை சேஃப்-ஹவுஸ் ஏற்படுத்திக் கொடுப்பது மட்டுமே! இளம் வயதுயடையவரான நேரு, விடுதலைப்புலிகள் உளவுப் பிரிவில் திறன்மிக்க ஒயர்லெஸ் ஆபரேட்டர். இவர், விஜயன் புதிதாக வாடகைக்கு பிடித்த வீட்டில் ஒயர்லெஸ் நிலையம் அமைத்துக் கொண்டார். இந்த நிலையத்தின் அழைப்புக் குறியீடு 910. தற்போது, ராஜிவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை கைதியாக உள்ள அறிவு, இதில்தான் தொடர்பு படுகிறார். அப்பாவி அறிவு அப்படி என்னதான் செய்தார் தெரியுமா? சிவராசனுக்காக நேரு விஜயன் வீட்டில் அமைத்த ஒயர்லெஸ் நிலையத்துக்கு தேவையான கார் பாட்டரியை மே முதல் வாரத்தில் வாங்கி கொடுத்தார். அந்த கார் பாட்டரியை, சிவராசனோ, நேருவோகூட வாங்கியிருக்க முடியும். அப்படி வாங்கியிருந்தால், அறிவு தற்போது தூக்கு தண்டனை கைதியாக இருக்க வேண்டியதில்லை. இன உணர்வாளர் என்ற முறையில், சிவராசனுடன் தொடர்பில் இருந்த அறிவுவிடம், பாட்டரிகள் வாங்க வேண்டும் என்று அவர் சொல்ல, இவர் இந்த பேட்டரிகள் எதற்காக என்று கேள்வி கேட்காமல் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்த பேட்டரிகளில், கார் பாட்டரி, ஒயர்லெஸ் இயக்க பயன்பட்டது. மற்றைய சிறிய பாட்டரிகள், ராஜிவ் காந்தியை கொல்ல தனு பயன்படுத்திய வெடிகுண்டை இயக்க பயன்பட்டது. சிவராசன் அறிவுவை அழைத்து, “இந்தாப்பா.. ராஜிவ் காந்தியை கொல்லணும். அதற்காக சீக்கிரம் ஓடிப்போய் பாட்டரிகள் வாங்கி வாங்க” என்று கேட்டிருக்க சான்சே இல்லை. விடுதலைப் புலிகள் உளவு பிரிவு இப்படி வெளிப்படையாக ஊரெல்லாம் சொல்லிவிட்டு ஆபரேஷன் செய்வதில்லை. எதற்காக பாட்டரி கேட்கிறார்கள் என்பதை தெரியாமல்தான் அறிவு பாட்டரி வாங்கி கொடுத்திருப்பார் என்பது, சிறப்பு புலனாய்வு குழுவுக்கும் நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும். அப்படியிருந்தும், ‘கொலை சதி’க்கு உதவியவர் என்ற பிரிவில் தண்டனை பெற்றிருக்கிறார் அறிவு. விஜயன், அவரது மனைவி செல்வலட்சுமி, ஆகியோரது வாடகை வீட்டு முன்பணம், வாடகை, அன்றாடச் செலவுகள் உள்பட அனைத்துச் செலவுகளுக்கும் சிவராசனே பணம் கொடுத்திருந்தார். ஜெயக்குமார் வீட்டுக்குச் சென்று வருவது உள்பட உள்ளூரில் போய் வருவதற்காக சுபா மற்றும் தனுவுக்காக சைக்கிள்கள் வாங்கவும் பணம் கொடுத்துள்ளார். ராஜிவ் படுகொலை நடந்த அன்று மூடிய அறையில் தனுவுக்கு ஆடைகளை அணிவிப்பதற்காக அரை மணி நேரம் செலவிட்டார் சுபா. அதைத் தொடர்ந்து போட்டோக்களும் எடுக்கப்பட்டன. விடுதலைப் புலிகள் தமது தற்கொலைத் தாக்குதலுக்கு அனுப்பும் நபர்களை விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுடனோ, அல்லது பொட்டு அம்மானுடனோ விருந்து உண்ண வைத்து, போட்டோக்கள் எடுப்பது வழக்கம். ராஜிவ் ஆபரேஷன் தமிழகத்தில் என்பதால், சிவராசனுடன் போட்டோ எடுத்துக் கொண்டார் தனு. சிவராசன் வெள்ளை குர்தா பைஜாமாவுடன் இருந்தார். சிவராசன், தனு, சுபா ஆகிய மூவரும், பிற்பகல் 2 மணியளவில் ராஜிவ் காந்தி பொதுக்கூட்டம் நடந்த இடத்துக்கு புறப்பட்டுச் சென்றனர். அப்போது, தனுவின் உடலில் வெடிகுண்டு இருந்தது. அதை இணைத்திருந்தது, அறிவு வாங்கிக் கொடுத்த பாட்டரி! அன்றிரவு, ராஜிவ் காந்தி கொல்லப்பட்டார். ராஜிவ் கொலை நடந்த பிறகு பத்திரிகைகளிலும், டி.வி.யிலும் வெளியான செய்திகளைக் கண்ட விஜயனின் அண்டை வீட்டுக்காரர்கள் விஜயனின் வீட்டில் தங்கியிருந்த விருந்தினர்கள் பற்றி சந்தேகப்படத் தொடங்கினர். இந்த வீட்டில் தங்கியிருந்து, சைக்கிள்களில் சென்று வந்து கொண்டிருந்த இரு பெண்களில் ஒருவர்தான் இருக்கிறார். தனுவைக் காணவில்லை. சிவராசன் தனது கண்களை, கறுப்புக் கண்ணாடி போட்டு மறைக்க முயன்ற போதிலும், அவர் ஒற்றைக்கண் உடையவர் என்பதை அறிந்தபோது அவர்களது சந்தேகம் வலுவடைந்தது. அந்த சமயத்தில்தான், அவர்களுக்கு வேறு வீடு பார்க்க பாஸ்கரன் முனைந்திருந்தார். ராஜிவ் படுகொலை நடந்த சில நாள்களுக்குப் பின், தொடர்ந்து பத்திரிகை, டி.வி.களில் வெளியான செய்திகளாலும், சிவராசன், சுபாவின் போட்டோக்கள் வெளியானதாலும், சிவராசன் வெளியே நடமாடுவது மிகவும் சிரமமாகிவிட்டது. அவரது ஒற்றைக் கண் சுலபமாக காட்டி கொடுத்துவிடும். அதனால், இவர்கள் இருவரும், விஜயன் வீட்டுக்குள் அடைந்திருந்தனர். பகலில் வெளியே செல்வதில்லை. விஜயனும், அவரது மனைவி செல்வலட்சுமியும் தங்களது 6 மாதக் கைக் குழந்தையுடன் அதே வீட்டில் இருந்தனர். ராஜிவ் காந்தி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களை வீட்டில் மாட்டிவைக்குமாறு விஜயனிடம் சிவராசன் கூறினார். அப்போதுதான் தமிழகத்தில் அ.தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்திருந்தது. தாங்கள் அ.தி.மு.க., மற்றும் ராஜிவ் காந்தி அனுதாபிகள் என்று காட்டுவதற்கு இந்தப் படங்கள் உதவும் என அவர் நினைத்திருக்கக் கூடும். கைது செய்யப்பட்ட விஜயனையும், பாஸ்கரனையும் விசாரித்தபோது, சிவராசன், சுபா ஆகிய இருவரும் வேறு எங்கோ தப்பிச் சென்றுவிட்டார்கள். அவர்கள் எங்கே போனார்கள் என்று இவர்களுக்கு தெரியவில்லை. அதேநேரத்தில், சிவராசன், சுபா ஆகிய இருவரும் ஏ.கே.47 ரக துப்பாக்கிகளையும், ஏராளமான தோட்டாக்களையும், ஒரு பிஸ்டலையும் வைத்திருப்பதாக விஜயன் தெரிவித்தார். “எந்த நேரமும் அவர்களில் ஒருவர் விழித்திருந்து உஷாராக இருப்பார். தம்மீது திடீர் தாக்குதல் நடத்தப்படக்கூடும் என்ற முன்னெச்சரிக்கையில் உள்ளார்கள்” என்றும் கூறினார். அத்துடன் அவர்கள் இருவரும் சயனைட் குப்பிகளை உடன் வைத்திருந்தனர் என்பதையும் உறுதிப்படுத்தினார். விஜயனிடம் தொடர்ந்து விசாரித்ததில் சிவராசனின் கட்டளையின் பேரில் அவர்களது சமையலறையில் ஒரு குழி தோண்டப்பட்டு, அதில் சிவராசனின் உடமைகளைப் போட்டு மூடிவிட்டதாகவும் தெரிய வந்தது. அந்தக் குழியைத் தோண்டிப் பார்த்தபோது, ஆன்டெனாவின் பாகங்களும், ஒயர்லெஸ் தொடர்புக்கு உதவிய (அறிவு வாங்கிக் கொடுத்த) கார் பாட்டரியும் இருந்தன. விஜயனின் வீட்டிலிருந்துதான் சிவராசன், ஒயர்லெஸ் மூலம் பொட்டு அம்மானுடன் தொடர்பு கொண்டிருந்தார் என்பதை பின்னர் உளவுத்துறை ரா உறுதி செய்தது. எப்படியென்றால், அழைப்புக் குறியீடு 910 உடைய இந்த ரகசிய ஒயர்லெஸ் நிலையத்தில் இருந்து போன தகவல்களை அவர்கள் ஒட்டுக் கேட்டிருக்கிறார்கள். ஆனால், ரகசிய ஒயர்லெஸ் நிலையம் எங்கிருந்து இயங்குகிறது என்பதை அவர்களால் கண்டறிய முடியவில்லை. இந்த ஒயர்லெஸ் நிலையமும் எந்த திசையில் செயல்படுகிறது என்பதை இந்திய உளவு அமைப்பினரும், தகவல் தொடர்பு நிபுணர்களும் சரியாகத்தான் கணித்து சிறப்பு புலனாய்வு பிரிவினரிடம் சொல்லியிருந்தார்கள். ஆனால், அந்த திசையில் எவ்வளவு தொலைவில் இயங்கியது என்பதைத் துல்லியமாக அவர்களால் கூற முடியவில்லை. கடைசியில் பார்த்தால், சிறப்புப் புலனாய்வுப் பிரிவின் அலுவலகமான மல்லிகையிலிருந்து வெறும் 12 கிலோ மீற்றர் தொலைவுக்குள்தான் அந்த ஒயர்லெஸ் நிலையம் இயங்கி வந்திருக்கிறது. இவர்கள், சிவராசனை மாநிலம் முழுவதிலும் தேடிக்கொண்டிருக்க, அவரோ இவர்களது அலுவலகத்தில் இருந்து 12 கி.மீ. தொலைவில் இருந்து, யாழ்ப்பாணத்தில் இருந்த பொட்டு அம்மானுடன் பேசிக்கொண்டு இருந்திருக்கிறார்!  …தொடரும்

-பல்வேறு தரப்புகளில் இருந்து பெறப்பட்ட தகவல்கள், மற்றும் ரிப்போர்ட்களுடன், ரிஷி

*** முன்னைய தொடர்களை பார்வையிட.. http://www.athirady.com/tamil-news/category/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D


Related Post

'கல்விக்கு உயிர்கொடுத்த காவியத் தலைவனின் காட்டு மிராண்டித்தனம் பாரீர்!' (photos)

01 Jan, 2012

உணர்ச்சி அரசியலை தவிர்ப்பீர்...

01 Jan, 2012

முல்லை பெரியாறு விவகாரம்: மீண்டும் தன்னிச்சையாக ஆய்வு நடத்திய கேரளா...!!!

01 Jan, 2012